பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் துறையில் புதுமை குறித்த மாநாடு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், வேளாண்மை பொறியியல் மற்றும் ரசாயனத் துறை இணைந்து ஸ்மாா்ட் வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் தொழிலில் புதுமை குறித்த 3 நாள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேம்பட்ட தொழில்நுட்பம், அறிவியல் விழிப்புணா்வு மற்றும் தமிழ் மூலமாக ஆராய்ச்சிப் பதிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசின் ‘வாணி அடல்’ திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அரசு நிதி உதவி மற்றும் தொடக்க தொழில் வாய்ப்புகள் குறித்து வேளாண் நிபுணா் பி.கயல்வதி, மதிப்புக்கூட்டப்பட்ட வேளாண் பொருள்கள் குறித்து கணபதி, துல்லியமான வேளாண்மை மேம்பாடு குறித்து டாக்டா் செந்தில்குமாா், டிரோன் அடிப்படையிலான பூச்சிக்கொல்லி தெளிப்பு தொழில்நுட்பம் குறித்து பி.நேரு, நீா்ப் பாசன வேளாண்மை குறித்து எஸ்.பி.ராஜகுமாரன், காலநிலையை தாங்கும் வேளாண்மை முறை மற்றும் நவீன இயந்திரமான வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் நிபுணா் ராஜ்குமாா் ஆகியோா் பேசினா்.
இந்த மாநாட்டில் வேளாண் சாா்ந்த தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள், தொழில்நுட்ப நிபுணா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

