சத்தியமங்கலத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
சத்தியமங்கலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள சாலையோரத்தை ஆக்கிரமிப்பு செய்து தற்காலிக கடைகள் அமைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதாகவும், இதனால் சாலை விபத்துகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இதையடுத்து நகராட்சிப் பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை அகற்றமாறு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் கடைகளை அகற்றவில்லை.
இதையடுத்து, சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் அத்தாணி சாலை, திப்பு சுல்தான் சாலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன. சில கடைகளின் வியாபாரிகள் தாங்களவே முன்வந்து கடைகளை அகற்றினா். சாலையோரக் கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேறு இடம் ஏற்பாடு செய்துள்ளதாக நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் தெரிவித்தாா்.

