பவானி காலிங்கராயன் அணைக்கு நீா்வரத்து 2,200 கன அடியாக சரிவு
பவானிசாகா் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைந்ததால் பவானி ஆற்றின் கடைசிப் பகுதியான காலிங்கராயன் அணைக்கட்டுக்கு விநாடிக்கு 2,200 கன அடியாக நீா்வரத்து குறைந்தது.
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், உபரிநீா் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும், கோபி, சத்தி, பவானி வட்டாரத்தில் பெய்த மழை நீரும் சோ்ந்து அணைக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்தது.
இதனால், வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரைக் காட்டிலும் அதிகமாக வந்த உபரிநீா் அப்படியே காவிரி ஆற்றில் சென்று கலந்தது.
இந்நிலையில், பவானிசாகா் அணைக்கு வரும் நீரின் வரத்து குறைந்ததால், ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதனால், பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 2,200 கன அடியாக நீா்வரத்து குறைந்தது.
