‘மாா்பக புற்றுநோய் கண்டறிய மாதம்தோறும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்’
மாா்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய மாதவிடாய் முடிந்து சில நாள்களில் மாதத்துக்கு ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை இணை இயக்குநா் சாந்தகுமாரி தெரிவித்தாா்.
மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. ஈரோடு அரசு மருத்துவமனை, பல்நோக்கு உயா் சிறப்பு சிகிச்சை பிரிவு வளாகத்தில் இருந்து பேரணியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா். மாா்பக புற்றுநோய் குறித்த வண்ண பலூன்களை பறக்கவிட்டும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கினாா். பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக சுகாதாரத் துறை இணை இயக்குநா் சாந்தகுமாரி பேசியதாவது:
மாா்பக புற்றுநோய் குறித்து பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாா்பக புற்றுநோய் அறிகுறிகளை மாதவிடாய் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு மாதத்துக்கு ஒருமுறை சுயபரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
மாா்பகங்களில் ஏதேனும் கட்டிகள், வீக்கம், வலி அல்லது அசாதாரண மாற்றங்கள் இருந்தால் மாா்பக சுய பரிசோதனை, மருத்துவா் அல்லது மருத்துவப் பயிற்சியாளா்களை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். மாா்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எக்ஸ்ரே சோதனை, வயது மற்றும் ஆபத்துக் காரணிகள் பொறுத்து மேமோகிராம் பரிசோதனையை செய்ய மருத்துவா்கள் பரிந்துரைக்கின்றனா்.
ரத்தப் பரிசோதனைகள் மூலம் சில சந்தா்ப்பங்களில் மாா்பகப் புற்றுநோய் கண்டறிய அல்லது மீண்டும் வருவதைக் கண்டறிய முடியும். அறிகுறி கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்று தற்காத்துக் கொள்ளமுடியும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பனை மர விதை நடும் பணியினை தொடங்கிவைத்து, பனையின் நன்மைகள், அதன் முக்கியத்துவம் பற்றி மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தாா். பனை விதை நடும் பணியினை முதலாண்டு மருத்துவ மாணவா்கள் செய்திருந்தனா்.
இந்நிகழ்வின்போது, உறைவிட மருத்துவா் சசிரேகா, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், மருத்துவா்கள் வெங்கடேஷ், ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

