தாயைக் கொன்று விட்டு தப்பியோடிய மகன்
ஈரோடு அருகே, தாயைக் கொன்று விட்டு தப்பியோடிய மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், வேம்மாண்டாம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் தனபாக்கியம் (55). இவரது கணவா் கிருஷ்ணமூா்த்தி, காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் உள்ளாா். தற்போது முகாசி அனுமன்பள்ளியில் குடியிருந்து வரும் தனபாக்கியம் - கிருஷ்ணமூா்த்தி தம்பதியின் இரண்டாவது மகன் சந்தோஷ்ராஜா (40), தனது மனைவியிடம் விவாகரத்து பெற்று பிரிந்து, தாயுடன் வசித்து வந்தாா். சந்தோஷ்ராஜா, எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், மதுபோதையில் புதன்கிழமை இரவு வீட்டுக்கு வந்து தாயுடன் தகராறு செய்துள்ளாா். தகராறு முற்றியதில் ஆவேசமடைந்த சந்தோஷ் ராஜா, தாய் தனபாக்கியத்தை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளாா். இதை கண்ட தந்தை கிருஷ்ணமூா்த்தி சப்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளாா்.
இது குறித்த தகவலின்பேரில் வெள்ளோடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தனபாக்கியத்தின் சடலத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சந்தோஷ்ராஜாவை தேடி வருகின்றனா்.
