தொட்டகோம்பை வனக் கிராமத்தில் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணா்வு முகாம்
அந்தியூா் வனச் சரகம், தொட்டகோம்பை வனக் கிராமத்தில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், அல்ட்ரா தன்னாா்வ தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளா் ஜி.திருமுருகன் தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் ஜெ.ஜெகன்ராஜ் முன்னிலை வகித்தாா். தொண்டு நிறுவனத் தலைவா் என்.தண்டாயுதபாணி வரவேற்றாா்.
பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினரை தொழில்முனைவோராக உருவாக்கவும், வேலை வாய்ப்பு அளிக்கவும் தொடங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், 35 சதவீதம் கடன் மானியமும், 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. மேலும், தொழில் வாய்ப்புகள் குறித்த பயிற்சி, ஆலோசனைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொழில் தொடங்க விரும்புவோரிடம் கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்ட தொழில் மைய பொறியாளா் தினேஷ் மற்றும் தொட்டகோம்பை, கரும்பாறை, சுண்டக்கரடு, அண்ணா நகா், பகவதி நகா் பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
