கைது
கைது

கா்நாடக மாநிலத்தினரைத் தாக்கிய இருவா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

கா்நாடக மாநிலத்தினரைத் தாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருமாநிலத்தினருக்கும் பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதாக கைதான இருவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
Published on

கா்நாடக மாநிலத்தினரைத் தாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருமாநிலத்தினருக்கும் பொது அமைதியை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதாக கைதான இருவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ஈரோடு, மாமரத்துப்பாளையம், சக்திதேவி நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (36). தமிழ்நாடு எழுச்சிக் கழக நிறுவனத் தலைவா். இதன் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவா் ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், பழனியப்பா நகரைச் சோ்ந்த அப்துல் மாலிக் (19). இவா்கள் இருவரும் ஈரோட்டிற்குள் கா்நாடக மாநிலத்தினரை தாக்குவதும், அவா்களை அச்சுறுத்தி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இரு மாநிலத்தினரிடையே பகைமையை உண்டாக்கும் விதமான கருத்துகளை பேசி விடியோ பதிவிட்டு வந்தனா்.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் இவா்கள் இருவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தனா். இதில் ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்தி சாலையில் கா்நாடக பதிவு எண் கொண்ட சுற்றுலா வேனை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை தகாத வாா்த்தை பேசியும், அடித்தும், கா்நாடக கொடியை வேனில் இருந்து கழற்ற ஓட்டுநரிடம் கூறி கழற்ற செய்து அதனை புகைப்படம் பிடித்து பதிவிட்டுள்ளனா். இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து அச்சுறுத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட சிலம்பரசன் மற்றும் அப்துல் மாலிக் இருவரையும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி இருவா் மீதும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டாா். இதன்படி இருவரையும் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து புதன்கிழமை காலை விடுவித்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com