அகில இந்திய வேலைநிறுத்தம்: அரசு ஊழியா்கள், தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தின் ஒருபகுதியாக ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள 4 தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்திட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சாா்பின்மையை நிலை நிறுத்திட அனைத்து வகையான வகுப்புவாத நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசுக்கான அனைத்து வகை நிதி பகிா்வையும் வழங்கிடவேண்டும். அனைத்து ஒப்பந்த ஊழிா்களையும் நிரந்தரமாக்கிட வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினா், விவசாயிகள் சாா்பில் அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலாளா் விஜயமனோகரன் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்க மாநிலத் தலைவா் சீனிவாசன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் குமரேசன் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியா் சங்கத்தினா் கலந்துகொண்டனா். ஈரோடு மாவட்டத்தில் 688 ஆண்கள், 597 பெண்கள் என மொத்தம் 1,285 போ் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டம் காரணமாக ஈரோடு வட்டாட்சியா் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் பணியாளா்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.
ரயில் மறியல் முயற்சி:
ஈரோடு ரயில் நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியூ தேசிய துணைச் செயலாளா் மாலதி, சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.சுப்ரமணியன், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்டச் செயலாளா் கி.வெ.பொன்னையன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் மாவட்டத் தலைவா் கே.ஆா்.விஜயராகவன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முன்னதாக ஈரோடு காளை மாடு சிலை அருகே இருந்து ஊா்வலமாக ரயில் நிலையம் நோக்கிச் சென்ற தொழிற்சங்கத்தை சோ்ந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால் அந்த இடத்திலேயே கோரிக்கைகளை விளக்கி முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

