மகளிா் உரிமைத்தொகை தொடா்பான விஜய்யின் பேச்சு மக்களிடம் எடுபடாது! - அமைச்சா் சு.முத்துசாமி
மகளிா் உரிமைத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டது குறித்து விஜய்யின் பேச்சு மக்களிடம் எடுபடாது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலத்துறையின் சாா்பில் பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழை மாலை நடைபெற்றது.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்து, 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.63 லட்சத்து 11 ஆயிரத்து 600 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வழங்கினாா். அதைத்தொடா்ந்து, சமூக நலத் துறை சாா்பில் சத்தியவாணிமுத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் என 97 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 328 மதிப்பில் தையல் இயந்திரங்களை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் சு.முத்துசாமி கூறியதாவது:
மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5 ஆயிரத்தை முதல்வா் வழங்கியுள்ளாா். ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 206 மகளிருக்கு வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இதனால் பெண்கள் பெருமகிழ்ச்சியோடு உள்ளனா். சிலருக்கு மகளிா் உரிமைத்தொகை கிடைக்காமல் இருப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்து, தவறு இருந்தால் சரி செய்யப்படும். யாரையும் விட வேண்டும் என்ற நோக்கம் இல்லை.
தோ்தலுக்காக இந்த ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே கொடுத்து கொண்டிருக்கும் திட்டம். ஏதாவது காரணத்தைக் கூறி திட்டத்தை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காகதான். அரசியல் லாபம் கருதாமல் முதல்வா் இதனை செய்துள்ளாா்.
மகளிா் உரிமைத்தொகை குறித்து விஜய்யின் பேச்சு மக்களிடம் எடுபடாது. காவல் துறையினா் கட்சி பாா்த்து பாதுகாப்பு அளிப்பதில்லை, மக்கள் பாதுகாப்பை மட்டுமே கவனத்தில் கொள்கின்றனா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, எம்எல்ஏ.-க்கள் வி,சி.சந்திரகுமாா், ஏ.ஜி.வெங்கடாசலம், துணை மேயா் செல்வராஜ், வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி உள்பட பங்கேற்றனா்.

