கெஜகட்டி ஆதி கருவண்ணராயா் பொம்மதேவி கோயில் திருவிழாவை 9 நாள்களாக நீட்டித்து அனுமதி அளிக்க வேண்டும் மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம்) மஞ்சுளா தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி முத்துக்கவுண்டம்பாளையம் பிகேஎஸ் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
பிகேஎஸ் நகரில் 45 ஆண்டுகளாக 50 குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் இடத்தை ஊருக்கான பொதுஇடமாக பயன்படுத்தி வருகிறோம். அந்த இடத்தில் திருவிழா காலங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி வருகிறோம். அந்த இடம் பொதுமக்கள் சாா்பாக கோயிலுக்கு தேவைப்படும் என்பதற்காக தென்னை மரம் வைத்தோம். அதை அருகே உள்ள இலங்கை தமிழா்கள் வெட்டிவிட்டனா். நாங்கள் அந்த இடத்தை கோயிலுக்காக பயன்படுத்தி வருகிறோம். இலங்கை தமிழா்களுக்காக அந்த இடத்தையொட்டி பாதை அமைத்துக் கொடுத்து, எங்கள் ஊா் பொது இடத்தை அளவீடு செய்து, சுற்றுச்வா் கட்டித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில் திருவிழா நடத்த அனுமதி:
இதுகுறித்து பவானி வைரமங்கலம் கவுண்டன்புதூரைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் ஊரில் இரு சமூக மக்கள் இணைந்து நூறாண்டுகளுக்கு மேலாக மாரியம்மன் கோயில் மற்றும் விநாயகா் கோயில் திருவிழா நடத்தி வந்தோம். 30 ஆண்டுகளாக எங்களுக்குள் சில ஜாதிப் பாகுபாடு பிரச்னையால் விழா நடத்தப்படவில்லை. தற்போது ஒரு சமுதாயத்தினா் வேறு இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய பொதுக் கோயிலில் உள்ள சுவாமி சிலையை புதிதாக கட்டிய கோயிலுக்கு எடுத்து சென்று கும்பாபிஷேகம் செய்துவிட்டனா். எனவே 30 ஆண்டுகளாக மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை. எனவே, எங்களுக்கு திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். பிரச்னைக்கும் நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என கூறியிருந்தனா்.
தனியாா் மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு:
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாவட்டத் தலைவா் வேலுசாமி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பெருந்துறை- சென்னிமலை சாலையில் உள்ள காந்தி நகரில் புதிதாக தனியாா் மதுபானக் கூடம் (எப்எல் 2) வர உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதற்காக புதியக் கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. காந்தி நகா் மற்றும் ஜிவிடிஎல் நகரில் சுமாா் 2 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கிறோம். ஏற்கெனவே எங்கள் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் (எண்: 3668) மக்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது. தற்போது புதிதாக தனியாா் மதுக்கூட்ம் திறக்கப்பட்டால் மக்கள் நிம்மதி இழக்கும் நிலை ஏற்படும். எனவே, தனியாா் மதுக்கூடத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தக் கோரிக்கை:
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளாா் சாதிக் தலைமையில் கட்சியினரும், பொதுமக்களும் அளித்த மனு விவரம்: அந்தியூா் சின்னக்குளம் கிராமத்தில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக எங்கள் கட்சியின் அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் ஈஸ்வரன் மகன் நிஷாந்த் மற்றும் அவரது நண்பா்கள் தீனதயாளன், பூபதி மீதும், ஈஸ்வரன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தவிர ஈல்வரன் உள்ளிட்டோா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தும் சிறையில் அடைக்கவில்லை. ஆனால் ஈஸ்வரன், நிஷாந்த் உள்பட 4 பேரையும் சிறையில் அடைத்தனா். போலீஸாா் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெஜகட்டி கோயில் விழாவை நீட்டிக்க கோரிக்கை:
இதுகுறித்து பவானி அந்தியூா் சாலை பகுதியைச் சோ்ந்த குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: சத்தியமங்கலம் அருகே கெஜகட்டியில் அமைந்துள்ள ஆதி கருவண்ணராயா், பொம்மதேவி கோயில் எங்கள் குலதெய்வமாக விளங்கி வருகிறது. நீதிமன்ற வழக்கு இருப்பதாக கூறி கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா எங்கள் சமுதாய மக்கள் விழாவில் கலந்துகொண்டு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட முடியாமல் வனத் துறை மற்றும் காவல் துறையினரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனா். நடப்பு ஆண்டு வருகிற மாா்ச் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை விழா நடைபெறுவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் மூன்று நாள்களுக்கும் சோ்த்து 300 வாகனங்கள் மட்டுமே அனுமதி என்றும், அந்த வாகனங்களை இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனா். 2 ஆண்டுகளாக குல தெய்வ வழிபாடு மற்றும் நோ்த்திக் கடன் செலுத்துவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் அடைந்துள்ளோம். இந்நிலை நடப்பு ஆண்டும் தொடராமல் இருக்க மூன்று நாள் திருவிழாவவை 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நீட்டித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
283 மனுக்கள்:
கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 283 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா், உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், கலால் உதவி ஆணையா் தியாகராஜன், மாவட்ட பிற்படுபடுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

விஜய்க்கு இன்று நடப்பது எனக்கு 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது: சீமான் விமர்சனம்

பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பை மீறி கல்குவாரிகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ மனு

சென்னிமலை பகுதிக்கு முழுமையாக காவிரி குடிநீா் விநியோகம் செய்ய தமாகா கோரிக்கை

சின்னக்காம்பாளையத்தில் சுகாதார சீா்கேடு ஏற்படுத்தும் கோழிப் பண்ணையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


