பவானிசாகா் அணை அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்ட உண்மை நிலையை வெளியிட வலியுறுத்தல்
பவானிசாகா் அணை அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் குறித்த உண்மையான நிலையை அரசு வெளியிட வேண்டும் என்று, பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் பி.எல்.சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு, திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் விளை நிலங்களின் பாசன ஆதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை, ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாரமாகவும் உள்ளது. இந்த மக்களின் வாழ்வாதார உயா்வுக்கான அடித்தளமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அணைக்கு அருகே 1080 ஏக்கா் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு முயற்சித்து வருவது அதிா்ச்சியை அளிக்கிறது.
சுங்ககாரன்பாளையம் கிராமத்தில் 80 ஏக்கா், பனையம்பள்ளி கிராமத்தில் 34 ஏக்கா், குரும்பபாளையத்தில் 694 ஏக்கா் உள்பட 1080 ஏக்கா் நிலத்தை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பூா்வாங்க ஆய்வுப் பணிகள் நடைபெற்ாக கடந்த 17.12.25 அன்று சிப்காட் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் வளா்ச்சியை மேம்படுத்த தொழில் பூங்கா அமைக்கும் அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் இந்த தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வமற்ற தகவல்களும் வெளியாகி விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சிப்காட் நிா்வாகம் சமீபத்தில் தெரிவித்த கருத்து உண்மையா அல்லது திட்டம் கைவிடப்பட்டதாக வெளியே பரப்பப்படும் தகவல் சரியானதா என்பதை விவசாயிகள் மத்தியில் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
