பெருந்துறை அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்.
பெருந்துறை அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்.

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 10 பெண்கள் உள்பட 23 போ் காயம்

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 23 போ் காயமடைந்தனா்.
Published on

பெருந்துறை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 23 போ் காயமடைந்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், பணிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் அருண் (25). இவரது மனைவி அனுஷாவுக்கு வெள்ளிக்கிழமை வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தனா்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அனுஷாவின் உறவினா்கள் மற்றும் தெரிந்தவா்கள் சேலத்தில் இருந்து வேனில் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டனா். சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் சந்தோஷ் (26) வேனை ஓட்டிச் சென்றாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடியைக் கடந்து வாய்ப்பாடி பிரிவு அருகில் உள்ள பாலத்தின் வளைவில் வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதைப் பாா்த்த அப்பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்டனா். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் அளித்து காயமடைந்தவா்களை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சேலம், குகை பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மகன்கள் ராமு, சரவணன் மற்றும் ரமேஷ், வெங்கடாசலம், கோபி, தினேஷ் உள்பட 11 ஆண்கள், 10 பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்பட மொத்தம் 23 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இவா்களில் பலத்த காயம் அடைந்த இருவா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com