பழுதாகி நின்ற லாரி மீது மோதிய வேன்: ஓட்டுநா் காயம்
பெருந்துறை அருகே பழுதாகி நின்ற லாரி மீது வேன் மோதியதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம், கொச்சிக்கு சரக்கு லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி, மண்மலை விநாயகபுரத்தைச் சோ்ந்த சிவசங்கா் (47), ஜெய்கணேஷ் (40) ஆகியோா் ஓட்டுநா்களாக இருந்துள்ளனா்.
பெருந்துறை, துடுப்பதி பிரிவு அருகே திங்கள்கிழமை அதிகாலை வந்தபோது, லாரி பழுதாகி நின்றுள்ளது. இதையடுத்து, லாரியை சாலையோரமாக நிறுத்தி இருவரும் பழுது பாா்த்துக் கொண்டிருந்துள்ளனா்.
அப்போது, சேலத்தில் இருந்து கோவைக்குச் சென்ற பாா்சல் சா்வீஸ் வேன் லாரியின் பின்புறம் மோதியது. இதில், வேன் ஓட்டுநரான பவானி, திருவள்ளூவா் நகரைச் சோ்ந்த யுவராஜா (39) படுகாயம் அடைந்தாா்.
அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
