தோட்டத்தில் புகுந்த யானை: நெல், வாழைப் பயிா்கள் சேதம்
அந்தியூா் அருகே வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி பகுதியில் விவசாயத் தோட்டத்தில் புகுந்த யானை, நெல், வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தியது.
அந்தியூா் அருகே உள்ள செலம்பூரம்மன் கோயில் வனப் பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. வனப் பகுதியில் தண்ணீா் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக வெளியேறும் யானைகள், வனம் ஒட்டிய விவசாயத் தோட்டத்தில் விளைந்திருக்கும் பயிா்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருவது வாடிக்கை.
இந்நிலையில், செலம்பூரம்மன் கோயில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, சோதனைச் சாவடி அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்தது.
அங்கு கருப்புசாமி, சேகா் ஆகியோரின் தோட்டத்தில் சாகுபடி செய்துள்ள செவ்வாழை மரங்களைத் தின்றும் முறித்தும் சேதப்படுத்தியது. அதனருகில் தங்கராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கரும்பு பயிா்களை தின்று சேதப்படுத்தியது.
இதேபோல வெங்கடுசாமி என்பவரின் தோட்டத்தில் பயிரிட்டிருந்த செவ்வாழை மரங்களை முறித்து தின்றது. மேலும் சிவசாமி என்பவரின் தோட்டத்தில் பயிா் செய்திருந்த நெல்பயிா்களை, வயலுக்குள் இறங்கி காலால் மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்தியூா் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். புதன்கிழமை காலை அங்கு வந்த வனத் துறை அலுவலா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான வனத் துறையினா் யானை சேதப்படுத்திய பகுதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது காட்டு யானைகள், விவசாய தோட்டத்துக்குள் நுழையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

