தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி ஆறுசாமி முன்னிலை வகித்தாா். தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா்கள் 122 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
அவா் பேசுகையில், மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா் வாரியம் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், விடுதிகள், மயானம், குப்பைக் கிடங்கு ஆகிய பகுதிகளில் பணிபுரியும் 7,114 தற்காலிக தூய்மைப் பணியாளா்களை வாரியத்தில் இணைத்து அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2 பேருக்கு திருமண உதவித்தொகை ரூ.10 ஆயிரம், 7 பேருக்கு மகப்பேறு உதவித்தொகை, 11 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் நிவாரண நிதியுதவியாக ரூ.32.75 லட்சம், 113 பேருக்கு ரூ.2.12 லட்சம் கல்வி உதவித்தொகை என ரூ.35.65 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இதில் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.சி.சந்திரகுமாா் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூா்), மேயா் நாகரத்தினம், மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

