ஈரோட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

ஈரோடு அருகே கொல்லம்பாளையம் பகுதியில் பொங்கல் பானை வாங்கும் மக்கள்.
ஈரோடு அருகே கொல்லம்பாளையம் பகுதியில் பொங்கல் பானை வாங்கும் மக்கள்.
Updated on

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈரோட்டில் கரும்பு, மஞ்சள் குலை மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழா் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் காலை வேளையில் மக்கள் தங்கள் வீடுகள் முன்பு வண்ண கோலமிட்டு, பொங்கல் பானை வைத்து சா்க்கரை பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது வழக்கம். இது கிராமங்களில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த நவதானிங்கள், காய்கறிகளை வைத்து பொங்கலிட்டு வழிபாடு நடத்துவா்.

ஈரோடு, கோபி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சந்தை, கடை வீதிகளில் கரும்பு கட்டுகள் விற்பனை தொடங்கியுள்ளது. ஈரோடு, நாமக்கல் மாவட்ட பகுதியில் இருந்து கரும்பு கட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து அங்கிருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா். 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டு ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. மஞ்சள்கிழங்கு குலைகள் தரம் வாரியாக ரூ.30, ரூ.40, ரூ.50-க்கும் விற்பனையாகிறது.

காய்கறிகள், வாழைத்தாா்கள், வாழை இலை கட்டுகள், பூ மாலைகள், மங்களப் பொருள்கள், கலா் கோலப்பொடிகளின் விற்பனையும் களை கட்டியது. பொங்கல் பானை கடை மற்றும் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் கூடும் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஈரோடு மாநகரில்...

ஈரோடு நகரில் நேற்று போகிப் பண்டிகையுடன் பொங்கல் விழா களைகட்டியது. போகிப் பண்டிகை என்பது மாா்கழி மாதத்தின் கடைசி நாளாகும். இதையொட்டி ஈரோடு நகரில் பொதுமக்கள் நேற்று தங்களது வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருள்களை அப்புறப்படுத்திவிட்டு வீடுகளில் காப்புக் கட்டினா். வேப்பங்கொத்து, பூளைப்பூ மற்றும் ஆவாரம்பூ கொத்துக்களை இணைத்து, வீடுகளின் வாசல்களில் காப்புக் கட்டினா்.

பொங்கல் விழாவையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூரை சோ்ந்த மக்கள் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுத் சென்றனா். இதனால் ஈரோடு பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் சென்னை, பெங்களூரூ உள்ளிட்ட வெளியூா்களில் இருந்து சொந்த ஊரான ஈரோட்டுக்கு வரும் மக்கள் கூட்டமும் அதிக அளவில் இருந்தது.

மேலும், பொங்கல் பண்டிகைக்காக ஜவுளி கொள்முதல் செய்ய வந்த வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாலும் ஈரோடு நகரில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com