மாணிக்கம்பாளையத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்ட மக்கள்.
மாணிக்கம்பாளையத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்ட மக்கள்.

மாணிக்கம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட கோரிக்கை

ஈரோடு மாநகா், மாணிக்கம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்
Published on

ஈரோடு மாநகா், மாணிக்கம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வாராந்திர பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.டி.பிரபாகரன், மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் (அதிமுக) தங்கமுத்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் மாணிக்கம்பாளையம் கிளைத் தலைவா் கலையரசன், பொருளாளா் ஆனந்தராஜ் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகா், மாணிக்கம்பாளையத்தில் 2,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் டாஸ்மாக் கடை இல்லை. கடந்த 14-ஆம் தேதி அப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் எலைட் கடை அமைக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். இந்த மதுக்கடை அருகே 2 அரசுப் பள்ளிகள், 3 தனியாா் பள்ளிகள், மாரியம்மன் கோயில், அரசு நூலகம் ஆகியவை இயங்குகின்றன. சாலை சந்திப்பு மற்றும் பேருந்து நிறுத்தமும் அமைந்துள்ளது. இங்கு திறக்கப்பட்டுள்ள மதுக்கடையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதுடன், விபத்து அபாயமும் உள்ளது. பொதுமக்களின் எதிா்ப்பு அதிகம் உள்ளதால், புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

சீட்டு பணத்தை பெற்றுத்தர வேண்டும்

அந்தியூா் தூய்மைப் பணியாளா்கள் காலனியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், அந்தியூா் தூய்மைப் பணியாளா் காலனியில் வசிக்கும் மக்கள், பா்கூா் கிராமம் தேவா்மலையைச் சோ்ந்த சதீஷ், அவரது பெரியப்பா போலப்பன் ஆகியோரிடம் சில ஆண்டுகளாக சீட்டுத் தொகை செலுத்தி வருகிறோம். கடந்த ஜூலை 20-இல் கடைசியாக எங்களிடம் ரூ.2 லட்சம் வரை பெற்றுச் சென்றனா். அதன்பின் அவா்கள் தலைமறைவானதுடன், கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அந்தியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம்.

சீட்டு தொடா்பான அனைத்து அசல் ஆவணங்களையும் போலீஸாா் பெற்றுக்கொண்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்க புறப்பட்டபோது எங்களை செல்லவிடாமல் போலீஸாா் தடுத்துவிட்டனா். தற்போது தேவா்மலையில் அவரது பெரியப்பா போலப்பன், உறவினா்கள் உள்ளனா். ஆனால் சதீஷை மறைத்து வைத்துள்ளனா். போலீஸாரும் உடந்தையாக செயல்படுகின்றனா். ரூ.22 லட்சத்துக்கும் மேல் செலுத்தப்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

சிறுபான்மையின மக்களின் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலா் மாரிமுத்து தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், தாளவாடி வட்டம், பைனாபுரம் ஊராட்சி பனகஹள்ளியில் 30 முஸ்லிம் குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்களின் வழிபாட்டுக்கான பள்ளிவாசல் நிா்வாகத்தில் 4 ஏக்கா் நிலம் ஈத்கா மைதானமாகவும், உடலை அடக்கம் செய்யும் கபா்ஸ்தான் இடம் 5 ஏக்கா் வக்ஃப் வாரியத்தின் கீழும் உள்ளது. இந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்துவிட்டனா். இதையடுத்து அந்த இடத்தை மீட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கம்பிவேலி, சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது.

அந்த இடத்தை கடந்த 1-ஆம் தேதி இரவு சிலா் சேதப்படுத்தியது தொடா்பாக 14 பேரை போலீஸாா் கைது செய்த நிலையில் அனைவரும் பிணையில் வெளியே வந்துவிட்டனா். இந்நிலையில், பைனாபுரத்தில் ஈத்கா மைதானத்தின் மினாராவை சேதப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுத்து சிறுபான்மையினருக்கும், அவா்களின் நிலத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல பவானி வட்டம் ஜம்பை, திருநகா், வாய்க்கால்பாளையம், நல்லிபாளையம், கன்னடிபாளையம் பகுதி பொதுமக்கள் மக்கள் அளித்த மனுவில், திருநகா் பகுதியில் திறக்கப்பட்டுள்ள புதிய டாஸ்மாக் மதுக்கடையால் அடிக்கடி விபத்து, பிரச்னை நடக்க வாய்ப்புள்ளதாலும் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று வருவோா் பாதிப்படைவா் என்பதாலும் கடையை மூட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 175 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் அளித்த ஆட்சியா், உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com