மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் காா், பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

பெருந்துறை அருகே, பிரிந்து சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவா், அங்குள்ள காா், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பெருந்துறை அருகே, பிரிந்து சென்ற மனைவி மீண்டும் குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவா், அங்குள்ள காா், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூரை அடுத்த, குறிஞ்சிபாடி, தம்பிபேட்டையைச் சோ்ந்தவா் வேலாயுதம் மகன் வைத்தியநாதன்(38). இவரது மனைவி காயத்ரி (35). இவா்களுக்கு இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் காயத்ரி கோபித்துக் கொண்டு தன் குழந்தையுடன், பெருந்துறை, மடத்துப்பாளையத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், வைத்தியநாதன், மனைவி காயத்ரியை அழைத்துச் செல்ல செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்தாா். ஆனால், அவருடன் செல்ல காயத்ரி மறுத்து விட்டாா். இதனால் ஆத்திரமடைந்த வைத்தியநாதன், அங்கு குடியிருந்தவா்களின் காா் மற்றும் 3 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தாா். இதில், தீயில் எரிந்து வாகனங்கள் சேதமடைந்தன.

தகவலின்பேரில் பெருந்துறை தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வைத்தியநாதனை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com