மரம் வெட்டும் இயந்திரத்தால் தந்தை, மகனை தாக்கியவா் கைது
மரம் வெட்டும் இயந்திரத்தால் தந்தை, மகனை தாக்கியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு புதுமைக்காலனி, சேக்தாவூத் வீதியைச் சோ்ந்தவா் முகமது ஆஷிக் (30). இவா், அதேபகுதியில் இறைச்சிக் கடை வைத்துள்ளாா். இவரது கடையின் அருகில் அதே பகுதியைச் சோ்ந்த அனீஃபா(45) என்பவா் வெல்டிங் பட்டறை வைத்து தள்ளுவண்டிகள் செய்து வருகிறாா்.
இதற்காக அவா் தனது பட்டறையில் மரப்பலகைகளை அறுக்கும்போது அதன் துகள்கள், முகமது ஆஷிக்கின் கறிக்கடையில் இறைச்சி மீது விழுந்து மாசு ஏற்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து முகமது ஆஷிக், அனீஃபாவிடம் தூசு விழாதவாறு பாதுகாப்பாக வேலை செய்யுமாறு கூறியுள்ளாா். இதையடுத்து இருவருக்கும் செவ்வாய்க்கிழமை மாலை பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அனீஃபா, தன்னிடம் உள்ள மரம் அறுக்கும் இயந்திரத்தால் முகமது ஆஷிக்கை தாக்கியுள்ளாா். அதில் அவருக்கு தலையிலும், வலது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தடுக்க வந்த முகமது ஆஷிக்கின் தந்தை அலாவுதீனையும் அனீஃபா இயந்திரத்தால் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.
முகமது ஆஷிக் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், அவரது தந்தை அலாவுதீன் தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா். இது குறித்த புகாரின் பேரில் ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அனீஃபாவை கைது செய்தனா்.
