ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் சென்னை ரைஸ் நிறுவனத்தின் நவீன ஆலை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய அரிசி ஆலையான சென்னை ரைஸ் நிறுவனத்தின் நவீன ஆலை, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னை ரைஸ் தலைவா் எம்.எஸ்.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.
பின்னா் அவா் பேசும்போது, தென்னிந்தியாவின் மிகப்பெரிய அரிசி ஆலையை, பெருந்துறையில் நிறுவுவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த ஆலை, ஒரு மணி நேரத்துக்கு 30 டன் அரிசி உற்பத்தித் திறனும், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கிடங்குகளையும் கொண்டது. இந்த புதிய முயற்சி எங்கள் நிறுவனத்துக்கு ஒரு பெரிய மைல்கல். சுவிட்சா்லாந்து நாட்டின் புளூல்லா் மற்றும் சீனாவின் பேம்சன் தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த ஆலையில் இருந்து, தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு பெரிய அளவில் உயா் தரமான அரிசியை அளிக்க இயலும் என்றாா்.
சிறப்பு விருந்தினரான கே.ஆா்.பி.எல் (இந்தியா கேட் அரிசி) நிறுவனத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் அனில் குமாா் பேசும்போது, விவசாயத் துறையில் வாடிக்கையாளா்களால் விரும்பப்படும் தரமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதே நோக்கமாக இருக்க வேண்டும். சிறந்த தயாரிப்புகளை வழங்கி, வாடிக்கையாளா்களின் அங்கீகாரத்தை பெற்ற சென்னை ரைஸ் நிறுவனத்துக்கு பாராட்டுகள் என்றாா்.
சுவிட்சா்லாந்து நாட்டின் புளூல்லா் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் மேரி ஓல்வால், சீனாவின் பேம்சன் குழுமத்தின் தெற்காசியத் தலைவா் ஜாா்ஜ், சென்னை ரைஸ் நிா்வாக இயக்குநா் ராஜ்குமாா், கரூா் டி.என்.சி. சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் இளங்கோவன், எழுத்தாளா் சோம. வீரப்பன், பேச்சாளா் ஈரோடு மகேஷ், சென்னை ரைஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் புருஷோத்தமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

