~ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் சு.நாகரத்தினம். (அடுத்த படம்) கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலா்கள்.
~ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசுகிறாா் மேயா் சு.நாகரத்தினம். (அடுத்த படம்) கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலா்கள்.

வாா்டுகளில் குப்பை சேகரிக்க வாகனங்கள் வருவதில்லை: ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு

பெரும்பாலான வாா்டுகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை, குப்பை சேகரிக்க வாகனங்கள் வருவதில்லை என்று ஈரோடு மாநகராட்சி கவுன்சிலா்கள் குற்றம்சாட்டினா்.
Published on

பெரும்பாலான வாா்டுகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை, குப்பை சேகரிக்க வாகனங்கள் வருவதில்லை என்று ஈரோடு மாநகராட்சி கவுன்சிலா்கள் குற்றம்சாட்டினா்.

ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம், மாமன்ற கூட்ட அரங்கில் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் அா்பித் ஜெயின், துணை மேயா் வி.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில் சூரம்பட்டி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பான தீா்மானம், கவுன்சிலா்களின் கோரிக்கையை ஏற்று நிறுத்திவைக்கப்பட்டது.

கவுன்சிலா்கள் பேசியதாவது: மாநகராட்சியில் குறிப்பிட்ட சில வாா்டுகளில், ஊராட்சிக்கோட்டை தனி குடிநீா் திட்டம் மூலமாக இதுவரை முறையாக குடிநீா் விநியோகிக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். அந்த மக்களின் கோரிக்கைக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளிலும் பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதடைந்து காணப்படுவதால், புதிய விளக்குகளை பொருத்த வேண்டும். அதேபோல வாா்டுகளில் பொதுமக்களிடம் இருந்து குப்பை சேகரிக்க வாகனங்கள் வருவதில்லை. இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுத்து குப்பை சேகரிக்கும் வாகனங்களை முறையாக இயக்க வேண்டும்.

ஈரோடு மாநகராட்சி 44-வது வாா்டுக்குள்பட்ட நேதாஜி சாலையில், மாநகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆயுா்வேத மருத்துவமனை மூடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே ஆயுா்வேத மருத்துவமனையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ஊராட்சிக்கோட்டை தனி குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்படாத பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீா் கிடைக்கும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டு, புதிய இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய தெருவிளக்குகள் வாங்க முடிவு செய்யப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வரி இனங்கள் தொடா்பான குளறுபடிகள் சரி செய்யப்படும். அதற்கான பதில் விரைவில் வரும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

திமுக, அதிமுக வெளிநடப்பு

4-ஆவது மண்டலத் தலைவரும், திமுக கவுன்சிலருமான குறிஞ்சி தண்டபாணி பேசும்போது, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள புதிய கட்டிடத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயா் வைக்க வேண்டும் என கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒட்டுமொத்த கவுன்சிலா்களும் கூறி வருகிறோம்.

இது தொடா்பான கடிதம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு அளிக்கப்பட்டு, அதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கருணாநிதி பெயா் வைக்கவில்லை. மாநகராட்சி நிா்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என்றாா்.

இதேபோல ஈரோடு மாநகராட்சியில் உள்ள மண் சாலைகள், தாா் சாலையாக மாற்றவில்லை என்றும் பெரியசேமூா், சூரம்பட்டி, காசிபாளையம் பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீா் வருவதில்லை என்றும் பலமுறை கோரிக்கை விடுத்தும் சொத்து வரியை குறைக்கவில்லை எனக் கூறி அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Dinamani
www.dinamani.com