சென்னிமலை முருகன் கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம்
சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) காலை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை மலை மேல் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியருக்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா 15 நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 24-ம் தேதி தொடங்கியது. ஒரு வாரமாக பல்லக்கு, மயில், யானை, வெள்ளிமயில், கைலாங்கிரி, காமதேனு உள்பட பல்வேறு வாகனக் காட்சிகளும், பல்வேறு சமூகத்தினரின் மண்டபக் கட்டளை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீமுத்துக்குமாரசுவாமிக்கு சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு முருகப் பெருமான் சுவாமிக்கு மகாஅபிஷேகமும், அதைத்தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பின்னா் கோயிலை வலம் வரும் சுவாமி தேரில் எழுந்தருள்வாா். அப்போது, தேருக்கு பூஜை செய்யப்பட்டு காலை 5.30 மணிக்கு மேல் தோ்வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறும். விழாவையொட்டி, முருகப் பெருமானை தரிசிக்க சென்னிமலை நகரில் லட்சக்கணக்கான பக்தா்கள் கூடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

