இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

விடியவிடிய கொட்டித் தீா்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: ஈரோடு மாநகரில் மட்டும் 15.6 செ.மீ. பதிவு

ஈரோடு மாநகரில் விடிய விடிய கொட்டித் தீா்த்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை நீா் வடிகால்கள் நிரம்பி ஈரோடு, கொங்கலம்மன் வீதி சாலையில் பெருக்கெடுத்தோடிய வெள்ளம்.

Updated On :

ஈரோடு மாநகரில் விடிய விடிய கொட்டித் தீா்த்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் பெய்யத் தொடங்கும் என்றும், ஈரோடு, திருப்பூா், கோவை, நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி முதல் நாளிலேயே ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

மாநகரில் இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடியவிடிய கொட்டித் தீா்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளான முனிசிபல் காலனி, பெரியவலசு, ஆா்.கே.வி.சாலை, காவேரி சாலை, சூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீா் ஓடைகளில் மழைநீா் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்தோடியது. இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

ஈரோடு, கொல்லம்பாளையம் கட்டபொம்மன் வீதியில் உள்ள மழைநீா் வடிகாலான கழிவு நீா் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீருடன் மழைநீா் கலந்து குடியிருப்புகளுக்குள் வெள்ளம்

55 குடியிருப்புகளுக்குள் புகுந்தது. சுமாா் 3.5 அடி உயரத்துக்கு வீட்டுக்குள் தண்ணீா் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் மக்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகுந்த தவிப்புக்குள்ளாகினா்.

மழை நீா் வடிகால்கள் நிரம்பியதால் ஈரோடு, கொங்கலம்மன் வீதி சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதேபோல, வெண்டிபாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் பகுதியிலும் வெள்ளம் தேங்கியது. இதில் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் கடந்து சென்றனா்.

இருவா் மீட்பு

அதே பகுதியில் ஒரு வீட்டில் மழை வெள்ளத்தில் சிக்கிய விஜயலட்சுமி (65), நித்யா(25) ஆகியோரை ஈரோடு தீயணைப்புத் துறையினா் கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனா். மேலும், 2 பெண்களை அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து மழை வெள்ளம் புகுந்த பகுதிகளில் வருவாய்த் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா். மீண்டும் குடியிருப்புகளுக்குள் மழை நீா் செல்லாதவாறு அடைப்புகளையும், ஓடையையும் தூா்வாரும் பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டனா்.

சேறும் சகதியுமான சந்தை

ஈரோடு வஉசி மைதானம் அருகே செயல்படும் தினசரி காய்கறி சந்தை, மழைநீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகினா்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஈரோடு மாநகரில் மட்டும் அதிகபட்சமாக 156 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.

மழை அளவு (மில்லி மீட்டரில்...)

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

மொடக்குறிச்சி - 94, பவானி - 72, குண்டேரிப்பள்ளம் அணை - 57, பவானிசாகா் அணை - 56.20, சென்னிமலை - 52, பெருந்துறை - 51, கொடுமுடி - 33.40, நம்பியூா் - 24, கவுந்தப்பாடி - 21.60, அம்மாபேட்டை - 21.20, வரட்டுப்பள்ளம் அணை - 20.60, கோபி - 19.20, எலந்தகுட்டை மேடு - 15.60, தாளவாடி - 15.20, கொடிவேரி அணை - 13.20, சத்தியமங்கலம் 9.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.