நீலகிரி: அதிமுகவில் கே.ஆர்.அர்ஜுனனைத் தொடர்ந்து அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் அதிமுக செயலராக இருந்த கே.ஆர்.அர்ஜுனன் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் அதிமுக செயலராக இருந்த கே.ஆர்.அர்ஜுனன் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட அதிமுக செயலராக கே.ஆர்.அர்ஜுனன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். அதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டுறவுத் தேர்தல்கள், அதிமுக நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அர்ஜுனன் மீது அதிமுகவினர் பெரும் அதிருப்தியடைந்திருந்தனர். தங்களது புகார்களை முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும் தொடர்ந்து அனுப்பியும் வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் கே.ஆர்.அர்ஜுனன் நீலகிரி மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலராக இருந்த பால நந்தகுமார் மாவட்டச் செயலராக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், உதகை சட்டப்பேரவை உறுப்பினருமான புத்திசந்திரன் தலைமையில் ஒரு பிரிவினரும், கே.ஆர்.அர்ஜுனன் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள பால நந்தகுமார் தலைமையிலும் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே கே.ஆர்.அர்ஜுனன் மீது அதிமுகவினர் கட்சித்தலைமைக்கு அனுப்பியிருந்த புகார் மனுக்களின் பேரில் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. குறிப்பாக அர்ஜுனனின் சகோதரர் கே.ஆர்.ஹால்துரை நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்காமல், புதியவரும், இளையவருமான ஹால்துரைக்கு இப்பதவி வழங்கியது குறித்து முதல்வருக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டிருந்தன. இப்புகார்களை தற்போது விசாரிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இச்சூழலில் நீலகிரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் பொறுப்பிலிருந்து கே.ஆர்.ஹால்துரை திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். சென்னையிலிருந்து வெளிவந்த உத்தரவுகளையடுத்தே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் அர்ஜுனன் மூலமாக கட்சியிலும், கூட்டுறவு அமைப்புகளிலும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் குறித்தும் ரகசிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com