கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா?

உதகை அருகே பழமையான ஒரு மரத்தை கோத்தர் இன பழங்குடியின மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
கோத்தர் பழங்குடியினர் வழிபடும் பிரமாண்டமான மரம்: 900 ஆண்டுகள் பழமையானதா?
Updated on
2 min read

உதகை அருகே பழமையான ஒரு மரத்தை கோத்தர் இன பழங்குடியின மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 6 பண்டைய பழங்குடியினரில் கோத்தர் இனத்தவரும் ஒரு பிரிவினர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் செட்டில்மென்ட்டுகள் என அழைக்கப்படும் 7 பகுதிகளில் வசிக்கின்றனர். இவற்றில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள செட்டில்மென்ட்டே இவர்களது தலைமையிடமாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு தலம் அமைந்துள்ள இடத்தில் பிரமாண்டமான மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் அடிப்பகுதியை குறைந்தது 40 பேர் இணைந்து தங்கள் கைகளைக் கோர்த்து நின்றால் மட்டுமே சுற்றிப் பிடிக்க முடியும். அதேபோல, இதன் உயரமும் பிரமாண்டமாகவே காணப்படுகிறது. இம்மரம் குறித்து குந்தா கோத்தகிரி ஊர்த் தலைவரான பெள்ளன் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:

கோத்தர் இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் 7 செட்டில்மென்ட்டுகளில் சுமார் 3,000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் இயற்கையை மட்டுமே வழிபடுபவர்களாவர். இவர்களில் 6 குழுவினர் வசிக்குமிடங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அங்குள்ள கோவில் திறக்கப்படும். ஆனால், குந்தா கோத்தகிரியிலுள்ள கோவில் மட்டும் அறுவடை நேரத்திலும், உழவு காலத்திலும் என ஆண்டுக்கு 2 முறை திறக்கப்படுகிறது. எந்தக் கோவிலின் வளாகத்திற்குள்ளும் பெண்கள் நுழைய அனுமதி கிடையாது.

குந்தா கோத்தகிரி கோவிலின் நுழைவுப் பகுதியில் சேல மரம் என அழைக்கப்படும் மரம் உள்ளது. இம்மரத்தைத் தான் கோத்தர்கள் தங்களது குல தெய்வமாக வழிபடுகின்றனர்.

இம்மரத்தின் அடி வேரையொட்டிய தண்டுப்பகுதி மட்டும் சுமார் 40 மீட்டர் அகலமுள்ளது. இந்த ஊர் தோன்றியபோது முதலில் கோவில் அமைப்பதற்காக எங்களது முன்னோர்கள் மண்ணை தோண்டியபோது முதலில் நடப்பட்டது இம்மரக்கன்றுதான் என பாரம்பரியமாக கூறப்பட்டு வருகிறது. இதுவரை இப்பகுதியில் சுமார் 10 தலைமுறைக்கும் மேற்பட்டவர்கள் வசித்துள்ளதால் இம்மரத்தின் வயது பல நூறு ஆண்டுகள் இருக்குமென கூறப்படுகிறது.

இம்மரம் குறித்து கேள்வியுற்று ஆய்வு செய்வதற்காக பிரான்சிலிருந்து வந்திருந்த ரிச்சர்டு என்ற ஆராய்ச்சியாளர் இம்மரத்தின் பட்டை, வேர் உள்ளிட்டவற்றைக் கண்டு இம்மரத்திற்கு குறைந்தது சுமார் 1,000 ஆண்டுகள் வயதிருக்குமென கூறிச் சென்றதால் அதையே நாங்களும் நம்பி வருகிறோம் என்றார்.

இம்மரம் குறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளரும், எமரால்டிலுள்ள மத்திய அரசின் மூலிகைப் பண்ணை இயக்குநருமான டாக்டர் ராஜன் தெரிவித்ததாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னரே இங்குள்ள மரங்களைக் குறித்த ஆவணங்கள் உள்ளன. அதனால் இம்மரம் குறித்த சரியான வயதை ஆய்வுகளுக்கு பின்னரே கூறமுடியும். இந்த மரம் அவர்களது வழக்கப்படி சேல மரம் என அழைக்கப்பட்டாலும் தாவரவியலில் இது பைக்கஸ் பிரிவைச் சேர்ந்ததாகும். இதுவும் அரச மரக் குடும்பத்தைச் சேர்ந்ததேயாகும்.

கோத்தர் இன பழங்குடியினர் நீலகிரி மாவட்டத்தில் கி.பி.1200-இல் இருந்தே வசித்து வருகின்றனர். இந்நிலையில் 1691-இல் கள்ளிக்கோட்டையிலிருந்து நீலகிரிக்கு முதலில் வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜேக்கப் பெரைரா முதலில் இப்பகுதிக்கே வந்துள்ளார். அப்போது மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்ததாகவும் தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார்.

எனவே, குந்தா கோத்தகிரியிலுள்ள இந்த மரம் பழமையான மரமாக இருக்கலாம். ஆனால், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததா என்பதை தீர்மானமாகக் கூற முடியாது எனத் தெரிவித்தார்.

மொத்தத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மரம் மிகப் பழமையான மரம் எனற பெயரைப் பெற்றுள்ளதுடன், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த தெய்வீக மரமெனக் கூறப்படுவதால் இம்மரத்தைப் பார்ப்பதற்காக ஆடிப்பெருக்கு தினத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் இப்பகுதியில் குவிந்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com