பொதுமக்களின் நகைகளைத் தனியாரிடம் அடகு வைத்து பல கோடி மோசடி செய்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள்: வங்கிக்குத் தொடர்பில்லாதவர்களுக்கு சம்மன் அனுப்பிய அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கெந்தொரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைகளைத் தனியாரிடம் அடகு வைத்து அதன் ஊழியர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் நகைகளைத் தனியாரிடம் அடகு வைத்து பல கோடி மோசடி செய்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள்: வங்கிக்குத் தொடர்பில்லாதவர்களுக்கு சம்மன் அனுப்பிய அதிகாரிகள்
Updated on
2 min read

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கெந்தொரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைகளைத் தனியாரிடம் அடகு வைத்து அதன் ஊழியர்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்பில்லாத நபர்களை விசாரணைக்கு வரும்படி கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே உள்ள கெந்தொரையில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில், சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், உதகையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நகையை அடகு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சுமார் 25 பேருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் இருந்து ஓர் அழைப்பாணை கிடைத்துள்ளது.அதில், கெந்தொரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைத்தது தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 10-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருப்பதாகவும், எனவே, அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பாணையைப் பெற்றவர்களில் பலரும் தற்போது வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் உதகையில் தங்கியிருந்து அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர்கள். இவர்களுக்கும் கெந்தொரை வங்கிக்கும், எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில், விசாரணைக்கு அழைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியுடன் வங்கியை அணுகியுள்ளனர்.

அப்போதுதான், கெந்தொரை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் பொதுமக்கள் அடகு வைத்திருந்த நகைகளை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் எடுத்து, தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கூடுதலாக பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், கெந்தொரை கூட்டுறவு வங்கி ஊழியர்கள், தங்களது வங்கியில் அடகு வைத்திருந்த பொதுமக்களின் நகைகளை, உதகையில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பெயரில் அடகு வைத்து மோசடி செய்திருப்பதும், இதன் காரணமாகவே மோசடிக்குத் தொடர்பே இல்லாத தனியார் நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இப்போது அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ள இந்த மோசடியானது, மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் இணைந்து இந்த வங்கியில் கடந்த ஏப்ரலில் தணிக்கை நடத்தியபோது தெரியவந்துள்ளது. பல கோடி ரூபாய் மோசடி செய்த வங்கியின் ஊழியர்கள் சிலரை அப்போதே பணியிடை நீக்கம் செய்ததுடன், தனியாரிடம் இருந்த நகைகளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதற்கிடையே மோசடிக்குத் தொடர்பில்லாத தனியார் நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது குறித்து கூறும்போது, எங்களுக்கும் கூட்டுறவு வங்கிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்கள் தனியார் நிதி நிறுவனத்துடன் மட்டுமே தொடர்பு வைத்துள்ளோம்.

எங்களது பெயரில் பொதுமக்களின் நகையை அடகு வைத்து மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் எங்களை விசாரணைக்கு அழைத்திருப்பது முறையல்ல.

மேலும், நேரில் ஆஜராகாதவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. மோசடி செய்தவர்களை விட்டுவிட்டு எங்களுக்கு சம்மன் அனுப்பி இருப்பது எங்களை அவமானப்படுத்தும் செயல் என்றனர்.

கூட்டுறவு வங்கி மோசடியில், வங்கிக்குத் தொடர்பில்லாதவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி இருப்பது குறித்து நீலகிரி கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com