உதகை நகரில் இரவு நேரங்களில் பந்தயம் என்கிற பெயரில் அதிவேகத்தில் இயக்கப்படும் இருசக்கர வாகனங்களால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதோடு, பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.
மோட்டார் சைக்கிள் பந்தயமென்பது பகல் நேரங்களில் திறந்தவெளி மைதானங்களிலும், ஆள் நடமாட்டமில்லாத சாலைகளிலும் மட்டுமே நடைபெற்று வந்த நிலை மாறி, தற்போது திரில்லர் பந்தயங்களாக உதகையில் அரங்கேறி வருகிறது.
உதகையில் தொட்டபெட்டா மலைச்சிகர அடிவாரத்திலிருந்தும், வேலிவியூ மலைச்சிகர அடிவாரத்திலிருந்தும், பிங்கர்போஸ்ட், கோல்ப்லிங்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்தப் பந்தயங்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகின்றன.
மோட்டார் சைக்கிள்களில் விளக்கை அணைத்து விட்டு ஓட்டுதல், இருளான பகுதிகளில் வேகமாக ஓட்டுதல், கல்லட்டி மலைப் பாதையில் ஓட்டுதல், வீலிங், கண்களை கட்டிக் கொண்டு ஓட்டுதல், குறித்த நேரத்ததில் இலக்கை எட்டித் திரும்புதல், அதிவேகமாக ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தப் பந்தயங்கள் நடத்தப்படுவதாக இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இப்பந்தயங்களில் அதிகபட்சமாகதோல்வி அடைவோர் தங்களது மோட்டார் சைக்கிள்களை வெற்றி பெற்றவர்களிடம் ஒப்படைத்தல் உள்பட நகை, ரொக்கம் , செல்லிடப்பேசி உள்ளிட்டவை பந்தயப் பொருள்களாக கட்டப்படுகின்றன.
இரவு நேரங்களில் வேகத்தோடு இயக்கப்படும் இத்தகைய இருசக்கர வாகனங்களால் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதவையாகி வருகின்றன.
ஆனால், இந்தப் பந்தயங்கள் நடைபெறும் சாலைகளில் இரவு நேரங்களில் காவல் துறையினரின் நடமாட்டம் அதிக அளவில் இல்லாததால் இவை பெரும்பாலும் வெளிவராத தகவல்களாகவே உள்ளன. ஆனால், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள் கூறுகையில், இருசக்கர வாகன விபத்தின் காரணமாக மாதத்துக்கு குறைந்தது 200 முதல் 300 எக்ஸ்ரேக்கள் ஒவ்வொரு தனியார் கிளினிக்கிலும் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர். இது அரசு மருத்துவமனைகளில் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களின் கணக்கில் இல்லாதவையாகும்.
கர்நாடகம், கேரள மாநிலங்களிலிருந்து கல்லட்டி மலைப் பாதை வழியாக இரவு 9 மணிக்கு மேல் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகனங்கள் இல்லாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இத்தகைய பந்தயங்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் கல்லூரி மாணவர்களிடத்தில் மட்டுமே நடத்தப்பட்ட இத்தகைய பந்தயங்கள் தற்போது உதகையிலுள்ள பிரபல தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகளிடத்திலும், பள்ளி மாணவர்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் நவீன ரக மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளவர்களும் தயக்கமின்றி இப்பந்தயங்களில் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக காவல் துறையினரிடம் பொதுமக்களிலிருந்து பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் புகார்களைத் தெரிவித்த போதிலும் நாளுக்கு நாள் இத்தகைய மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் அதிகரித்தே வருகின்றன. இதைத் தடுக்க காவல் துறை கண்காணிப்பு கேமராக்களை கொண்டு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மட்டுமின்றி இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை அளித்தால் மட்டுமே இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். உதகையைப் பொருத்த வரையில் நாளுக்கு நாள் விபத்துகள்அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற திட்டமிட்ட செயல்களை தடுக்க காவல் துறை இனியாவது விழித்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுகுறித்து மக்கள் சட்ட மையம் அமைப்பின் மாநில இயக்குநரும், வழக்குரைஞருமான விஜயன் கூறியதாவது:
இந்தப் பந்தயங்களால் வாகனத்தை ஓட்டுபவருக்கு மட்டுமல்லாமல் சாலையில் நடந்து செல்லும் அப்பாவி மக்களும் பாதிக்கப்படுவது ஏற்க முடியாதது. இந்த ஆபத்தான விளையாட்டு கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்திருப்பதை முளையிலேயே காவல் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து உதகை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கதிரவன் கூறியதாவது:
உதகையில் பகல் நேரங்களில் பைக் பந்தயம் நடப்பது குறைந்துள்ளது. அதையும் மீறி பைக் பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூ. 3,000 அபராதம் விதிப்பது, வாகனத்தைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
மேலும், இதைத் கட்டுப்படுத்த 30 காவலர்களைக் கொண்ட 5 தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பந்தயம் நடப்பது குறித்த தகவல் கிடைத்தால் அந்த இடத்துக்கே இக்குழுவினர் சென்று அவர்களைப் பிடித்துவிடுவர்.
இதன்படி, உதகை நகரில் 48 பேர் பைக் பந்தயத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 28 பேர்தான் இக்குழுவில் உள்ளனர். மீதமுள்ளோரிவ் 4 பேர் உயிரிழந்ததோடு, சிலர் விபத்தில் சிக்கி வாகனத்தையே ஓட்ட முடியாத நிலையில் உள்ளனர். இரவு நேரங்களில் ரேஸ் நடப்பது குறித்து தகவல் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.