சாக்லேட் தயாரிப்பில் புதிய உத்தி உதகையில் அறிமுகம்

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் வாங்கிச் செல்லும் பொருள்களில் ஒன்று ஹோம் மேட் சாக்லேட்டாகும். ஆனால், சாக்லேட் தயாரிப்பில் மற்றொரு முறையும் உள்ளது. ஹேண்ட் மேட் என்பதாகும்.
Updated on
2 min read

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் வாங்கிச் செல்லும் பொருள்களில் ஒன்று ஹோம் மேட் சாக்லேட்டாகும். ஆனால், சாக்லேட் தயாரிப்பில் மற்றொரு முறையும் உள்ளது. ஹேண்ட் மேட் என்பதாகும். பழங்காலத்தில் இத்தகைய முறையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தற்போது ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே கொக்கோவை வைத்து தயாரிக்கப்பட்ட சாக்லேட் பார்களை வைத்து, அதில் தேவையான சுவையையும், தேவையான கூடுதல் பொருள்களையும் சேர்த்து சாக்லேட் தயாரிக்கின்றனர். ஆனால், கொக்கோ விதைகளை வாங்கி அதை வெயிலில் உலர வைத்து அதிலிருந்து கொக்கோ பொடியை உருவாக்கி அதைக் கூழாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படுவதே ஹேண்ட் மேட் சாக்லேட்டாகும்.
சாக்லேட்டுகளின் தாயகமாகக் கருதப்படும் மெக்ஸிகோ நாட்டில் இத்தகைய முறைதான் இன்னமும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது பீன் டூ பார் (கொக்கோ விதையிலிருந்து சாக்லேட்) என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய முறை இந்தியாவில், ஒருசில இடங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டாலும் நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உதகையில் உள்ள சாக்லேட் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் பசலூர் ரஹ்மான், நிர்வாகி அப்துல் ஆகியோர் உதகையில் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
பொதுவாக சாக்லேட் தயாரிப்பில் மிக முக்கியமான முறை ஹேண்டு மேட் சாக்லேட்டாகும். இது திடமானது என்பதால் பெரும்பாலானோர் இம்முறையை விரும்புவதில்லை. ஆனால், உதகையில் பீன் டூ பார் என்ற புதிய முறையை சாக்லேட் மியூசியத்தில் கையாள்கிறோம். சாக்லேட் இனிப்புத் தன்மை வாய்ந்ததல்ல. அது லேசான கசப்புத் தன்மை கொண்டதாகும். இதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்போதுதான் சாக்லேட்டின் உண்மையான சுவை வெளிப்படும்.
இதுதொடர்பான தேசிய அளவிலான சாக்லேட் கண்காட்சி கோவையில் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியின் நிறைவாக உதகையில் வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் மார்ச் 10-ஆம் தேதி இந்தியன் பைன் சாக்லேட் தினம் என்ற பெயரில் சாக்லேட் நாள் கடைப்பிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த ககாவ் சாக்லேட்டேரியா மியூசியத்தின் உரிமையாளர்களான மயாரி கேஸ்ட்லானஸ், கிறிஸ்டியன் மார்ட்டினெஸ் சூசா ஆகியோர் கூறியதாவது:
சாக்லேட் தயாரிப்பு மெக்ஸிகோ நாட்டில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பானமாகவே சாக்லேட் பயன்படுத்தப்பட்டு வந்தது. மெக்ஸிகோ நாட்டில் கொக்கோ இல்லாத உணவே இல்லை. இந்நாட்டில் கொக்கோ உணவுப் பொருளாக மட்டுமின்றி உடலுக்குப் பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள் வரை கொக்கோவின் பங்கு பிரதானமாகும்.
கடவுளின் பானமாகவும் இது கருதப்படுவதால் கொக்கோவைக் கொண்டு சாக்லேட் தயாரிக்கும்போது அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரம் வேங்கையின் தோலால் மூடப்பட்டிருக்கும். இதை மன்னர்கள் மட்டுமே கையால் திறப்பர். அந்த அளவுக்கு புனிதத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. தற்போது இந்தியாவில் பீன் டு பார் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய சாக்லேட் தயாரிப்பில் புதிய மைல் கல்லாக அமையும் என குறிப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், உதகை சாக்லேட் மியூசியத்துக்கு மெக்ஸிகோவின் சாக்லேட் தயாரிக்கும் பாத்திரமான சாக்லேட்டேரியா டி ரியோ என்ற பாத்திரம் நினைவுப் பொருளாக வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com