விளைபொருள் பதப்படுத்தும் நிலையப் பணிகளை விரைந்து முடிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தல்

கோத்தகிரியில் அறுவடை செய்யப்பட்ட விவசாயப் பொருள்களைப் பதப்படுத்தும் நிலையத்துக்கான  ரூ. 3 கோடி செலவிலான கட்டுமானப் 
Updated on
1 min read

கோத்தகிரியில் அறுவடை செய்யப்பட்ட விவசாயப் பொருள்களைப் பதப்படுத்தும் நிலையத்துக்கான  ரூ. 3 கோடி செலவிலான கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி பகுதியில், குறிப்பாக நெடுகுளா, மிளிதேன், சுள்ளிக்கூடு பகுதியில், நூற்றுக்கணக்கான பரப்பளவில், மலைக் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.
அறுவடை செய்யப்படும் காய்கறிகள், மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
"மண்டி கமிஷன், லாரி வாடகை, ஏற்று -இறக்குக் கூலி' என, விவசாயிகள் கொண்டுசெல்லும் காய்கறி மூட்டைகளுக்கு விவசாயிகள் கணிசமான தொகையைச் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. 
அறுவடை நாள்களில் கட்டுபடியான விலை கிடைத்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இல்லையெனில் இழப்புதான் மிஞ்சும்.
இது ஒருபுறம் இருக்க, பயிரிடும்போது மழை பெய்தால், விதைகளுடன், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் நீரில் நனைந்து சேதமடையும். அதேபோல, அறுவடை நாள்களில் மழை பெய்தாலும், காய்கறிகள் பாதிப்படையும். கூடுதல் சிரமங்களுக்கு இடையே, காய்கறிகளை விற்பனை செய்யும்போது, மண்டிகளில் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை.
அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை பதப்படுத்துவதற்கான சூழல் இல்லாததால், உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய நிலை தற்போது உள்ளது.
இதைத் தவிர்க்கும் பொருட்டு,  "விதை உள்ளிட்ட இடு பொருள்களும், அறுவடை செய்யப்படும் காய்கறிகளும் சேதமடையாமல் இருக்க, விவசாயப் பொருள்களை பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும்' என, சுள்ளிக்கூடு, நெடுகுளா பகுதி விவசாயிகள், சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமுவிடம் கோரிக்கை விடுத்தனர். அவரது பரிந்துரைப்படி, வேளாண் துறை சார்பில் ரூ. 3 கோடி  நிதி ஒதுக்கப்பட்டு, சுள்ளிகூடு - காகாசோலை இடையே, பதப்படுத்தும் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து  விவசாயிகள் கூறுகையில்,  "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க, அனைத்து அம்சங்களுடன் பதப்படுத்தும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை விரைந்து முடித்து, மழைக்காலம் துவங்குவதற்கு முன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com