பந்தலூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒரே ஆசிரியர்! 130 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

பந்தலூரிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 130 மாணவர்கள் படித்துவரும் நிலையில் ஒரே ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
Updated on
1 min read

பந்தலூரிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 130 மாணவர்கள் படித்துவரும் நிலையில் ஒரே ஆசிரியர் மட்டுமே மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம்,  பந்தலூர்அருகே லோயர் பெக்கி பகுதியில் அரசுத் தொடக்கப் பள்ளி உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் பழைமையான இந்தப் பள்ளியில் தற்போது  தமிழ்,  ஆங்கில வழிக் கல்வியில் 130 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஆனால், இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் பொறுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்துவது வரை ஒரே ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார். 
இங்குள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு குறைந்தபட்சம் 3 ஆசிரியர்களாவது பணியிலிருக்க வேண்டும். இந்தப் பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் குழந்தைகள் அதிக அளவில் படித்து வரும் இந்தப் பள்ளிதான் கூடலூர் கல்வி மாவட்டத்திலேயே அதிக  எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட தொடக்கப் பள்ளியாகும்.
கூடலூர் பகுதியில்  70 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு 7 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில் பந்தலூர் பள்ளியில் ஒரே ஆசிரியர்தான் பணியாற்றி வருகிறார். மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்குதல், புத்தகம், சீருடைகளை எடுத்து வருதல்,  அலுவல் சார்ந்த கூட்டங்களில் பங்கேற்பது என பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டிய நிலையில் உள்ள ஒரே ஆசிரியரால் படிப்பு தொடர்பாக மாணவர்கள் மீது செலுத்த வேண்டிய தனிப்பட்ட கவனத்தை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பெற்றோர், ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனாலும், இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை.  அண்மையில் நடைபெற்ற ஆசிரியர்  பணியிட மாறுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் தொடர்பான கவுன்சலிங் கூட்டத்திலும் பந்தலூர் தொடக்கப் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிப்பது குறித்து விவாதிக்கப்படவில்லை.
அரசு விதிகளின்படி இப்பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் கட்டாயமாக நியமிக்கப்பட வாய்ப்பிருந்தும் அதை செயல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவது இப்பள்ளி  மாணவர்களின் பெற்றோரிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது,  இது குறித்து  விசாரித்து தகவல் சொல்வதாகத் தெரிவித்தனர்.
பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் சிமியோன், துணைத் தலைவர் கமலநாதன் ஆகியோர் கூறுகையில்,  கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தப் பள்ளி குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு  பள்ளிகளில் சேர்க்க ஆலோசித்து வருகின்றனர்.
அதற்கு முன்னதாக இந்தப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com