புதுமையான குந்தா நீரேற்று புனல்மின் உற்பத்தி திட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய புனல் நீர்மின் திட்டமான பைக்காரா நீர் மின் திட்டத்தை தொடர்ந்து எமரால்டு-போர்த்தியாடா இடையிலான புதிய நீர்மின் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி

ஆசியாவின் மிகப்பெரிய புனல் நீர்மின் திட்டமான பைக்காரா நீர் மின் திட்டத்தை தொடர்ந்து எமரால்டு-போர்த்தியாடா இடையிலான புதிய நீர்மின் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
தமிழகத்தின் ஒட்டு மொத்த தொழில் வளர்ச்சிக்காகவும், தொடர்ந்து தமிழகத்தை மின் மிகை மாநிலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மின் உற்பத்தியைப் பெருக்குதல், மின் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், மின் தொடரமைப்புகளை நிறுவுதல், மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தை விரிவாக்குதல் போன்ற பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
அந்த வகையில், எரிசக்தித் துறையின் சார்பில், உதகை அருகேயுள்ள காட்டுக்குப்பை பகுதியில் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் 500 மெகாவாட் குந்தா நீரேற்று புனல்மின் திட்டத்திற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. 2021-2022-ஆம் ஆண்டில் நிறைவு பெறவுள்ள இத்திட்டம், நாளொன்றுக்கு 3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உடையதாகும். அதனால் ஆண்டுக்கு சுமார் 1095 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 
தமிழகத்தை இருளில்லா மாநிலமாகவும், மின் மிகை மாநிலமாகவும் மாற்றியதில் பைக்காரா இறுதி நிலை நீர்மின் நிலையம், மரவகண்டி, மாயாறு மற்றும் குந்தா நீர்மின் நிலையங்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. 150 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட பைக்காரா இறுதி நிலை நீர்மின் நிலையம் 1994-ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2005-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. ஆசியாவிலேயே அதிக அழுத்தம் மற்றும் உயரம் கொண்ட முதல் புனல் மின் உற்பத்தி நிலையம் இதுவென்றாலும் இந்த மின் நிலையம் அமைப்பதற்காக இங்கே எந்த வனப் பகுதியும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதோடு, இங்கு வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படவில்லை என்பதுதான் இந்த நீர்மின் நிலையத்தின் தனிச்சிறப்பாகும்.
இதைப்போலவே போர்த்திமந்து அணையிலிருந்து எமரால்டு அணைக்கு குகைக்குள் தண்ணீரைக் கொண்டு வந்து பீக்அவர்ஸ் எனப்படும் மிக முக்கியமான நேரங்களான காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின் உற்பத்தி செய்யப்படும். இதைத் தவிர இரவு நேரங்களிலும் அதிக மின்சாரம் தேவையில்லாத காலத்திலும் எமரால்டு அணைக்கு வந்துள்ள தண்ணீரை மீண்டும் போர்த்திமந்து அணைக்கே திரும்பக் கொண்டு சென்று அந்த தண்ணீரை வைத்தே சுழற்சி முறையில் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இதுவாகும். 
இதில் முதற்கட்டமாக 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமிக்க முடியாது என்பதால், உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரை சுழற்சி முறையில் சேமித்து அந்த தண்ணீரைக் கொண்டே தொடர்ந்து மின்சாரம் எடுக்கும் புதுமையான திட்டம் இதுவாகும். இத்தகைய முறை தற்போது காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் ஜெயலலிதாவாலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com