உதகை ஜெம் பார்க் நிறுவனத்தில் "எர்த் ஹவர்' நிகழ்வு அனுசரிப்பு
By DIN | Published On : 01st April 2019 08:54 AM | Last Updated : 01st April 2019 08:54 AM | அ+அ அ- |

உதகை ஜெம் பார்க் நிறுவனத்தில் "எர்த் ஹவர்' நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு அனுசரிக்கப்பட்டது.
உலக வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மின்சார பயன்பாட்டினை ஆண்டில் ஒரு மணி நேரமாவது நிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் யுனெஸ்கோ அமைப்பின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு, அதை கடைப்பிடிக்கும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 30 ஆம்தேதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு மின்சாரத்தின் பயன்பாடு நிறுத்தப்படும்.
உலகம் முழுவதும் "எர்த் ஹவர்' என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் இந்நிகழ்வு உதகை ஜெம் பார்க் நிறுவனத்தில் சனிக்கிழமை இரவு கடைப்பிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி தொடர்பாக ஜெம் பார்க் நிறுவனத்தின் இருப்பிட இயக்குநர் இஸ்மாயில் கான் கூறுகையில், ஜெம் பார்க் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக "எர்த் ஹவர்' நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக ஜெம் பார்க்கில் தங்கியிருந்த விருந்தினர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் இதில் பங்கேற்றனர். சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அங்கிருந்த அனைவரிடமும் வழங்கப்பட்டது.
அதேபோல, ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதை நினைவு கூரும் வகையில் 60 என்ற எண் வடிவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. இந்த ஒரு மணி நேரம் வரையிலும் அங்கிருந்த விருந்தினர்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதில் ஜெம் பார்க் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளின் மேலாளர்கள் சுரேஷ் நாயர், பிரதீப் குமார், வினோத் குமார், சதீஷ் குமார், ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.