குன்னூர் அருவங்காடு பகுதியில் "சிக்னலை' சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st April 2019 08:54 AM | Last Updated : 01st April 2019 08:54 AM | அ+அ அ- |

குன்னூர் - உதகை நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு பகுதியில் "சிக்னலை' சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை, 4 பள்ளிகள் உள்ளன. இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா உத்தரவின்பேரில் இப்பகுதியில் "சிக்னல்' அமைக்கப்பட்டது. அதேபோல, "ஜீப்ரா கிராசிங்', எச்சரிக்கை பலகைகள், மக்கள் சாலையை கடந்து செல்லும் இடத்தில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வரும்போது, இங்கு மீண்டும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, இப்பகுதியில் உள்ள "சிக்னலை' சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் "ஜீப்ரா கிராசிங்', எச்சரிக்கை பலகைகள், மக்கள் சாலையை கடக்கும் இடத்தில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.