நீலகிரி தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தயார்: மாவட்ட ஆட்சியர் தகவல்
By DIN | Published On : 17th April 2019 08:36 AM | Last Updated : 17th April 2019 08:36 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
உதகையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
நீலகிரி மக்களவைத் தொகுதியில் 6 லட்சத்து 65,337 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 202 பெண் வாக்காளர்களுமாக மொத்தம் 13 லட்சத்து 65,608 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 75,549 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 94,353 பெண் வாக்காளர்களுமாக மொத்தம் 5 லட்சத்து 69,902 வாக்காளர்கள் உள்ளனர். சமவெளிப் பகுதிகளில் உள்ள மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டும் 3 லட்சத்து 89,788 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 5,849 பெண் வாக்காளர்களுமாக மொத்தம் 7 லட்சத்து 95,637 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுடன் மூன்றாம் பாலினத்தவர் 69 பேரும் உள்ளனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் 1,610 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. தொகுதிக்கு 4 வாக்குச் சாவடிகள் வீதம் 24 மாதிரி வாக்குச்சாவடிகளும், அனைத்து மகளிர் வாக்குச் சாவடிகளாக 12 வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளன. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் 120 சதவிகிதமும், விவி பேட் இயந்திரங்கள் 130 சதவிகிதமும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இத்தொகுதியில் 121 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் 77 வாக்குச் சாவடிகளும், மேட்டுப்பாளையத்தில் 31 வாக்குச் சாவடிகளும், அவிநாசியில் 4 வாக்குச் சாவடிகளும், பவானிசாகரில் 8 வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளன.
தேர்தல் பணிகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் 3,338 அலுவலர்கள் உள்பட தொகுதியில் 7,786 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்காக 5,338 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு 564 சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 154 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.3.74 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்குகளைப் பொருத்தவரை தகுதியுள்ள 5,404 பேரில் 4,098 பேருக்கு அவர்கள் பணியாற்றும் வாக்குச் சாவடிகளிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதியுடைய 1,636 பேரில் 1,611 பேர் வாக்களித்துள்ளனர் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...