ஒரு வழிப்பாதை போக்குவரத்தைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
By DIN | Published On : 26th April 2019 07:45 AM | Last Updated : 26th April 2019 07:45 AM | அ+அ அ- |

உதகை சீசனையொட்டி குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் அளித்த மனு விவரம்:
நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் நடக்க உள்ள கோடை விழாவையொட்டி உதகையில் இருந்து மேட்டுப்பாளையம், கோவை செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்லும் வகையில் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு பகல் நேரத்தில் லாரிகள் இயக்க அனுமதி கிடையாது. இதனால், குறிப்பிட்ட நேரத்தில் சரக்குகளைக் கொண்டுச் சேர்க்க முடியாமல் லாரி உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு பணியில் இருந்த மாவட்ட காவல் அதிகாரி வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு வழிப்பாதையாக அறிவித்திருந்தார். இதனால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பொது மக்களின் அத்தியாவசியப் பொருள்களை எளிதில் கொண்டு போய் சேர்க்க முடிந்தது.
தற்போது வாரத்தின் அனைத்து நாள்களும் போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் உள்ளதால் லாரிகள் மூலம் கொண்டுச் செல்லக் கூடிய அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளன.
இரவு 9 மணிக்கு மேல் கல்லார் பகுதியில் இருந்து லாரிகள் நீலகிரி மாவட்டத்துக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்லாறு பகுதியில் பகல் நேரத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்படுவதால் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகின்றன.
எனவே, அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுச் செல்லும் வாகனங்களுக்கு பாஸ் வழங்க வேண்டும். தங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.