உதகையில் பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி
By DIN | Published On : 04th August 2019 10:48 AM | Last Updated : 04th August 2019 10:48 AM | அ+அ அ- |

உதகையில் பழங்கால வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
உதகை தமிழகம் மாளிகை வளாகத்தில் இருந்து நடைபெற்ற வாகனங்களின் அணிவகுப்பை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.
பழங்கால வாகனங்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 15 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த அணிவகுப்பில் 80 கார்களும், 40 இருசக்கர வாகனங்கள் இடம்பெற்று இருந்தன.
இது அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தக் கண்காட்சியில் 1928 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்பட்ட பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்தக் கார்களின் அணிவகுப்பு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றன. பின்னர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட அனைத்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் ஒய்.டபிள்யூ.சி.ஏ. மைதானத்தில் காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த அணிவகுப்பில் ஆஸ்டின், டாட்ஜ் பிரதர்ஸ், பிளைமவுத், பென்ஸ், மோரீஸ், ஹில்மேன், லேண்ட்ரோவர், ஹெரால்ட், வேன்கார்டு மற்றும் பழங்கால இருசக்கர வாகனங்களான லேம்பர்டா, ரோட்கிங், நார்டன், இன்னோசென்டி, ஜாவா, பாபீ, எல்.டி. உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, கொரியா, ஜப்பான் மற்றும் இந்திய நாடுகளின் பழங்கால வாகனங்கள் இடம்பெற்று இருந்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...