நீலகிரியில் இயற்கை உரத்துக்கு வரவேற்பு: பேரூராட்சி மூலம் 17 டன் உரம் விற்பனை
By DIN | Published On : 04th August 2019 10:50 AM | Last Updated : 04th August 2019 10:50 AM | அ+அ அ- |

நீலகிரியில் இயற்கை உரத்துக்கு அதிக வரவேற்பு உள்ளதால் கேத்தி பேரூராட்சி மூலம் 17 டன் உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
குன்னூர் அருகே கேத்தி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 68 கிராமங்கள் உள்ளன. நீலகிரியில் சுற்றுச்சூழல் மற்றும் வனப் பகுதியை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் படி கேத்தி பேரூராட்சியில் வாகனம் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
15 வார்டுகளில் குப்பைகள் நேரடியாக சேகரிக்கப்படுகின்றன. மீதம் உள்ள 3 வார்டுகளில் குப்பைத் தொட்டிகளில் கொட்டப்படுகின்றன. பேரூராட்சியில் தினமும் சுமார் 1 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இவை அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பிரகாசபுரத்தில் உள்ள வளம் மீட்புப் பூங்காவில் கொட்டப்படுகிறது.
அங்கு கண்ணாடி, தெர்மாகோல், எலக்ட்ரானிக்ஸ், ரப்பர், இரும்பு, பிளாஸ்டிக் கழிவுகள் என மக்காத குப்பைகளை பணியாளர்கள் பிரித்து எடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து உணவுக் கழிவுகள், கீரைக் கழிவுகள், பழக் கழிவுகள், தோட்டக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு ஒரு இடத்தில் கொட்டப்படுகிறது.
அதில் சுத்திகரிக்கப்பட்ட மனிதக் கழிவுகளை கொட்டி தண்ணீர் தெளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க அவை இயற்கை உரமாக மாறுகிறது. அவை 8 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் என தனித் தனியாக அடுக்கி வைக்கப்படுகிறது.
இதையடுத்து, 45 முதல் 60 நாள்களில் மக்கும் குப்பை இயற்கை உரமாக மாறிவிடும். பின்னர் அவை இந்திரத்தில் கொட்டப்பட்டு சிறு, சிறு பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரத்தை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த உரம் காய்கறி பயிர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுத்து அதிக மகசூலை தருகிறது. ஒரு கிலோ 4 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை விவசாயிகளுக்கு 17 டன் இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நட்ராஜ் கூறியதாவது:
நீலகிரியில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தி விவசாயம் செய்வதால், மண்ணின் வளம் கெடுகிறது. மேலும், பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் போதிய அளவு இல்லை. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
தற்போது மலை மாவட்டமான நீலகிரியில் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கப்படுவதோடு வளமான சுற்றுச்சூழலை உருவாக்க முடியும். அதிக மகசூலை தரும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்ணின் வளத்தைப் பெருக்க வேண்டும் என்றார்.