"மனித-விலங்கு மோதலை தடுக்க தனிப் பிரிவு அமைக்க வேண்டும்'
By DIN | Published On : 04th August 2019 10:49 AM | Last Updated : 04th August 2019 10:49 AM | அ+அ அ- |

மனித-விலங்கு மோதலை தடுக்க தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என்று முதுமலை கிளை வன அலுவலர்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூடலூரில் முதுமலை கிளை வன அலுவலர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் முருகேசன், மாநிலப் பொருளாளர் சுதீர்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும், கூடலூர், பந்தலூர் பகுதியில் பணிபுரியும் வன ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள்: கூடலூர் வனக் கோட்டத்தில் நீண்ட நாள்களாக பணிபுரியும் ஊழியர்களை அவர்கள் விரும்பும் பகுதிக்கு இடமாற்றம் வழங்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக வனத் துறையில் புதிதாக பயிற்சி முடித்து வருபர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பல ஆண்டுகளாக வனக் காப்பாளர்களாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தற்போது வனத் துறையில் பணிபுரிபர்களுக்கு மனித-விலங்கு மோதலை தடுக்கும் பணி கூடுதலாக வழங்கப்படுவதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதற்கு தனிப் படை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவபிரகாஷ், பொருளாளர் ராஜேந்திரன், வனச் சரக அலுலர்கள் சரவணன், தயானந்த், விஜய், துணைத் தலைவர் சந்தனராஜ் மற்றும் நிர்வாகிகள் வன ஊழியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.