அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 06th February 2019 06:48 AM | Last Updated : 06th February 2019 06:49 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ் பயனடைய விரும்புவோர் பிப்ரவரி 8 ஆம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் பணிக்கு செல்லும் மற்றும் சுய தொழில் செய்யும் மகளிருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இவற்றில் எது குறைவோ அதற்கான மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் கிராம மற்றும் நகர்ப் புறங்களிலிருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் 1,074 பேர் பயனடைந்துள்ள நிலையில், நடப்பு ஆண்டிலும் 1,074 பயனாளிகளைத் தேர்வு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பயனடையும் பயனாளிகளின் வயது 18 முதல் 40-க்குள் இருப்பதோடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலோ அல்லது சுயமாகவோ தொழில் புரிபவராகவோ இருத்தல் வேண்டும். அதேபோல, பயன்பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமமும் பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் பயனாளிகள் கொள்முதல் செய்யும் இருசக்கர வாகனங்கள் 2018 ஜனவரி 1ஆம் தேதிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருப்பதோடு, 125 சிசி திறனுக்கு உள்பட்டவையாகவும், இந்திய வாகனச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வாகனமாகவும் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, இத்திட்டத்தின்கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் தங்களது வயது வரம்புச் சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, ஓட்டுநர் உரிமம், சுய தொழில் அல்லது பணிபுரிவதற்கான சான்று, கல்விச்சான்று, ஆதார்அட்டை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், விதவை, ஆதரவற்றோர், 35 வயதுக்கு மேல் திருமணமாகாதோர், திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றுகள், சாதி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் உரிய அலுவலர்களிடமிருந்து பெற்ற சான்று, இரு சக்கர வாகனத்துக்கான விலைப்புள்ளி அல்லது விலைப் பட்டியல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் மற்றும் வயது சான்றிதழ் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எனவே, தகுதியுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களைப் பெற்று பிப்ரவரி 8 ஆம்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...