உதகை நகராட்சி ஊழியர்கள் போராட்டம்
By DIN | Published On : 04th January 2019 07:24 AM | Last Updated : 04th January 2019 07:24 AM | அ+அ அ- |

உதகை நகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரே நடந்த இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். போராட்டத்தில், ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய லீவு சரண்டரை உடனடியாக வழங்க வேண்டும், 2014ஆம் ஆண்டில் வழங்கப்பட வேண்டிய ஸ்பெஷல், செலக்ஷன் மற்றும் சூப்பர் கிரேடுகளை உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதித் தொகையையினை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேபோல, மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு கையுறை, காலணி மற்றும் சீருடை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும், பணியின்போது விபத்தில் காயமடையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் அனைத்து செலவினங்களையும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும், மார்க்கெட் பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கைவண்டி வழங்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.