தீட்டுக்கல் குப்பை தளத்தில் பசுமை தீர்ப்பாயக் குழு ஆய்வு: இடத்தை விரைவில் காலி செய்ய நகராட்சிக்கு நோட்டீஸ்
By DIN | Published On : 04th January 2019 07:24 AM | Last Updated : 04th January 2019 07:24 AM | அ+அ அ- |

உதகை நகராட்சியின் குப்பை கொட்டும் தளமான தீட்டுக்கல் தளத்தில் பசுமை தீர்ப்பாயக் குழுவினர் நேரில் ஆய்வு செய்துள்ளனர். இதையடுத்து இந்த இடத்தை விரைவில் காலி செய்யுமாறு நகராட்சிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உதகை நகராட்சிப் பகுதியில் சேரும் குப்பைகள் மற்றும் கழிவுகள் அனைத்தும் நகருக்கு சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள தீட்டுக்கல் பகுதியில் கொட்டப்படுகின்றன. இதற்காக வனத் துறைக்குச் சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு உதகை நகராட்சி நிர்வாகம் எடுத்திருந்தது. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த நிலத்தை காலி செய்யுமாறு வனத் துறை வலியுறுத்தி வந்தது. ஆனால் இதற்கு மாற்றாக மார்லிமந்து பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் இருந்து வனத் துறைக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தீட்டுக்கல் பகுதியில் நிலம் வைத்திருக்கும் சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தீட்டுக்கல் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் தனது நிலம் பாழ்பட்டு விட்டதாகவும், அதனால் இந்த குப்பை கொட்டும் தளத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பசுமை தீர்ப்பாயத்திலும் அவர் மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இதையடுத்து பசுமை தீர்ப்பாயக் குழுவினர் அண்மையில் தீட்டுக்கல் பகுதிக்கு வந்து நேரில் ஆய்வு நடத்தியதோடு, அங்குள்ள மண், நீர் ஆகியவற்றின் மாதிரிகளையும் சேகரித்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து தீட்டுக்கல் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் தளத்தைக் காலி செய்யுமாறு பசுமை தீர்ப்பாயத்தில் இருந்து உதகை நகராட்சிக்கு தற்போது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
தீட்டுக்கல் குப்பை கொட்டும் தளத்தில் குப்பை கொட்டுவதை படிப்படியாக குறைத்து வருகிறோம். இதற்காக உதகை நகருக்குள்ளேயே ரூ.3 கோடி செலவில் நுண் உர செயலாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 20 டன் எடையிலான மட்கும் குப்பைகளை உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2 மையங்கள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் எஞ்சிய நான்கு மையங்களும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். மட்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு மறு சுழற்சிக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விடுகின்றன. இதனால் தீட்டுக்கல் பகுதியில் அதிகளவில் குப்பை கொட்ட வேண்டிய தேவையில்லை. தீட்டுக்கல் குப்பை கொட்டும் தளத்தை காலி செய்யுமாறு பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ள நிலையில் உதகை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால், தற்போது கால அவகாசம் கேட்டு விண்ணப்பிக்க உள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.