போதையில் மினி பஸ்ஸை இயக்கிய ஓட்டுநர் கைது
By DIN | Published On : 04th January 2019 07:24 AM | Last Updated : 04th January 2019 07:24 AM | அ+அ அ- |

குன்னூரில் போதையில் மினி பஸ்ஸை இயக்கிய ஓட்டுநரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
குன்னூரில் 30க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை, ஓட்டுப்பட்டரை, வண்டிச்சோலை , ஜெகதளா, உள்ளிட்ட பல்வேறு பகுகிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜெகதளா செல்லும் மினி பஸ்ஸில் ஓட்டுநர் செல்வா, மது அருந்திவிட்டு பஸ்ஸை இயக்குவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர்கள் பாலு, ரவி, முதன்மை காவலர் சுரேஷ் ஆகியோர் மினி பஸ் ஓட்டுநரைப் பிடித்து விசாரித்ததில் அவர் மது அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் ஓட்டிய மினி பஸ்ஸை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் டி. சுப்ரமணி, ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தார்,
மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவரிடம் மின்பஸ்ஸை ஓட்ட அனுமதி அளித்த அதன் உரிமையாளர் மீதும் வழக்கு தொடர உள்ளதாக காவல் ஆய்வாளர் சுப்ரமணி தெரிவித்தார். ஜெகதளா செல்லும் செங்குத்தான சாலையில் மின்பஸ்ஸை இயக்கிய ஓட்டுநர் போதையில் இருந்தது அந்த கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.