3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத புதிய ரேஷன் கடை
By DIN | Published On : 09th June 2019 02:59 AM | Last Updated : 09th June 2019 02:59 AM | அ+அ அ- |

குன்னூர் அருகே மணியாபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் ரேஷன் கடை திறக்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
குன்னூர் அருகே மணியாபுரம், குன்னக்கொம்பை, ஹால்டாவேலி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு, சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இங்கு 357 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள் ரேஷன் பொருள்கள் வாங்க 2 கி.மீ. தொலைவு பயணம் செய்து கோடேரி பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 2015-2016இல் ரூ. 6 லட்சம் மதிப்பில் மணியாபுரத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இந்தக் கட்டடம் கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. மணியாபுரத்தில் உள்ள ரேஷன் கடையைத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கடையை விரைவாகத் திறக்க உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.