கூடலூரில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 09th June 2019 02:59 AM | Last Updated : 09th June 2019 02:59 AM | அ+அ அ- |

கூடலூரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.
ரம்ஜான் பண்டிகை, கோடை விடுமுறை காரணமாக கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவது தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. கூடலூர் நகரில் குறுகிய சாலையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் எளிதில் நகரைக் கடந்து செல்லமுடிவதில்லை. இதனால் நகருக்குள் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் போக்குவரத்து தலைமைக் காவலர் சுரேஷ் மீது மோதியதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கடந்த மாதம் அதே இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியதில் போக்குவரத்துக் காவலர் பலத்த காயமடைந்த நிலையில், தற்போது விடுமுறையில் உள்ளார். எனவே, இந்தக் குறுகிய சாலையில் உள்ள மையத் தடுப்புகளை அகற்றி, தேவைக்கேற்ப வாகனங்களை பாதையில் மாற்றிவிட வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.