கோத்தகிரி பகுதியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு: கூடுதல் தொழிலாளர்களைக் கொண்டு அறுவடை தீவிரம்
By DIN | Published On : 14th June 2019 09:18 AM | Last Updated : 14th June 2019 09:18 AM | அ+அ அ- |

கோத்தகிரி பகுதியில் பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளதால், கூடுதல் தொழிலாளர்களைப் பணி அமர்த்தி தேயிலை பறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம், தேயிலை விவசாயத்தை நம்பியுள்ளது. இத்தொழிலை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இடுபொருள்களின் விலை உயர்வு, தோட்டப் பராமரிப்புச் செலவு உள்ளிட்ட செலவினங்களுடன் ஒப்பிடுகையில், தேயிலைக்குக் கிடைத்து வரும் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை.
கடந்த சில நாள்களாக, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தேயிலைத் தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் பசுந்தேயிலை மகசூல் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இனிவரும் நாள்களில் மழை தொடரும் பட்சத்தில், மகசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பசுந்தேயிலையைப் பறிக்க முடியாமல் இலைகள் முதிர்ந்து, கரட்டு இலையாக மாற வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணிபுரிந்து பசுந்தேயிலையைப் பறித்து வருகின்றனர்.