சாலையில் திரியும் குதிரைகள் பறிமுதல்: உதகை நகராட்சி நிர்வாகம் அதிரடி
By DIN | Published On : 14th June 2019 09:18 AM | Last Updated : 14th June 2019 09:18 AM | அ+அ அ- |

உதகையில் பதிவு செய்யப்படாமல் சாலையில் சுற்றித் திரியும் குதிரைகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து வியாழக்கிழமை காந்தள் பவுண்டில் அடைத்தனர்.
உதகை நகருக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், சுற்றித் திரியும் குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடைகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குதிரை சவாரிக்குப் பின் அதன் உரிமையாளர்கள் குதிரைகளை நகரில் உலவ விட்டு விடுகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து புகார் மனு அனுப்பியதை அடுத்து, உதகை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து காந்தள் பவுண்டில் அடைத்தனர்.