குன்னூரில் காலாவதியான பொருள்களை கொட்டியவருக்கு அபராதம்
By DIN | Published On : 22nd March 2019 07:38 AM | Last Updated : 22nd March 2019 07:38 AM | அ+அ அ- |

குன்னூரில் காலாவதியான பொருள்களை, கொண்டு வந்து கொட்டிய வாகன ஓட்டுநருக்கு புதன்கிழமை ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூர் டி.டி.கே. சாலையில் காலாவதியான பிஸ்கெட், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து கொட்டப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாலமுருகன் உத்தரவின்பேரில், நகர்நல அலுவலர் டாக்டர் ரகுநாதன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆரஞ்ச் குரோவ் சாலையில், 10 பைகளில் பிளாஸ்டிக் மற்றும் காலாவதியான பிஸ்கெட் போன்றவற்றை சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து கொட்டிய ஓட்டுநர் ராஜாவைப் பிடித்து ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இவை அனைத்தும் இங்குள்ள தனியார் மொத்த பிஸ்கெட் நிறுவனத்தில் இருந்து கொண்டு வந்து அவ்வப்போது கொட்டிச் செல்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்நிறுவனத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...