தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.54 ஆயிரம் அபராதம் வசூலிப்பு
By DIN | Published On : 05th May 2019 03:41 AM | Last Updated : 05th May 2019 03:41 AM | அ+அ அ- |

உதகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற ஒட்டுமொத்த கள ஆய்வில் தடை செய்யப்பட்ட 13 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு ரூ. 54 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேருராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தைத் தவிர்ப்பது மற்றும் பொது இடங்களில் குப்பைகளைத் கொட்டுவதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த கள ஆய்வு வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கள ஆய்வில் உதகை, குன்னூர், கூடலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுதும் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தடை செய்யப்பட்டுள்ள சுமார் 13 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ. 54 ஆயிரத்து 200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.