மே மாதத்துக்கான பச்சைத் தேயிலை விலை: தென்னிந்தியத் தேயிலை வாரியம் அறிவிப்பு
By DIN | Published On : 05th May 2019 03:42 AM | Last Updated : 05th May 2019 03:42 AM | அ+அ அ- |

மே மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக பச்சைத் தேயிலை கிலோவுக்கு ரூ. 15.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தென்னிந்தியத் தேயிலை வாரிய இணை இயக்குநர் பகலவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீலகிரியில் பிரதானத் தொழிலாக பச்சைத் தேயிலை விவசாயம் உள்ளது. இதனைச் சார்ந்து 16 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் தேயிலைத் தொழிற்சாலைகளும் உள்ளன. 65 ஆயிரத்திற்கும் மேலான விவசாய குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வசித்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக பச்சைத் தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இப்பிரச்னைக்கு நிரந்தத் தீர்வாக பச்சைத் தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ. 30 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தேயிலை வாரியம் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய விலை நிர்ணயக் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்தக் கமிட்டி மூலம் நீலகிரியில் உள்ள அனைத்து தேயிலைத் தொழிற்சாலைகளுக்கும் விவசாயிகள் வழங்கும் பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச விலையை மாதத்தில் முதல் வாரத்தில் அறிவித்து வருகின்றனர்.
அதன்படி, நடப்பு மே மாதத்துக்கு குறைந்தபட்ச விலையாக பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ. 15.75 என நிர்ணயம் செய்யப்பட்ள்ளது. இந்த விலையை அனைத்து தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்துக்குத் தகவல் கொடுக்கலாம்.
மேலும், தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் ஆகியோர் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை கடைபிடிக்காத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.