உதகையில் பழங்குடியினக் குழுக்களின் "ஆதி மகோத்சவம்' கண்காட்சி தொடக்கம்: 10 நாள்கள் நடைபெறுகிறது
By DIN | Published On : 19th May 2019 07:18 AM | Last Updated : 19th May 2019 07:18 AM | அ+அ அ- |

உதகையில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு இணையம் சார்பில் 10 நாள்கள் நடைபெறும் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களது பாரம்பரிய கலைத் திறனைப் பாதுகாக்கவும் மத்திய அரசின் சார்பில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் சார்பில் உதகை கோடை விழாவை ஒட்டி தாவரவியல் பூங்கா சாலையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் 10 நாள்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
இது தொடர்பாக மலைவாழ் மக்கள் மேம்பாட்டு இணையத்தின் மண்டல மேலாளர் ராமநாதன் உதகையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மலைவாழ் மக்கள் மேம்பாட்டு இணையம் மத்திய பழங்குடியினர் நலத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பின் சார்பில் நாட்டிலுள்ள பழங்குடியினத்தவருக்கு உதவும் வகையிலும், அவர்களது கலைத் திறனை பாதுகாக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் "டிரைப்ஸ் இந்தியா' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் அதிக அளவில் உள்ளதாலும், உதகையில் கோடை சீசன் என்பதாலும் அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், நாகாலாந்து, மத்தியப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள 70க்கும் மேற்பட்ட பழங்குடியின குழுக்களின் சார்பில் "ஆதி மகோத்சவம்' என்ற பெயரில் கண்காட்சி நடத்தப்படுகிறது. சனிக்கிழமை தொடங்கியுள்ள இந்தக் கண்காட்சி மே மாதம் 27ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது என்றார்.